தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பெறக் கூடாது எனக் கூறித் தமிழக அரசு ஏப்ரல் 20ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக் கோரித் தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் பெறுவது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில் தமிழக உயர் கல்வித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தனியார் கல்லூரிகள் சங்கத்தின் மனுவைப் பரிசீலித்த அரசு, ஆகஸ்டு, டிசம்பர், ஏப்ரல் மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.