விவசாயிகளுக்கு நிலையாக இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என மத்திய எரிசக்தி துறை இணையமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா 2020 தொடர்பாக, மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் ராஜ் குமார் சிங், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மின்சார சட்ட திருத்த மசோதா 2020ன் மீதான தமிழ்நாட்டின் நிலை குறித்தும், மின்சாரத் துறையின் கோரிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.
தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தார். அதில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், அனைத்து வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் திட்டத்துக்கு எதிரான பிரிவை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நிதி நெருக்கடியில் உள்ள மின் பகிர்மான கழகங்களுக்கு கோவிட் கால நிதியாக 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை சுட்டிக் காட்டி, அதேபோல மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவைத்தொகையை ஈடு செய்வதற்காக கோரப்பட்டுள்ள 20 ஆயிரத்து 622 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளொன்றுக்கு மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி, தமிழகத்துக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போது தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் 50 கோடியே 88 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் இந்த சந்திப்பின் போது தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய இணை அமைச்சர் வெகுவாக பாராட்டினார். மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.