ஈரோடு மாவட்டம் பண்ணாரி வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களிடம் சோதனைச்சாவடி ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக - கர்நாடக எல்லையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல்துறை, வனத்துறைச் சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன.
லாரிகளில் அதிகப் பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறதா என்றும், முறையான ஆவணங்கள் உள்ளனவா என்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் சோதனை செய்து வாகனங்களை அனுமதிப்பர்.
இந்நிலையில் லாரி ஓட்டுநர்களிடம் சோதனைச்சாவடி ஊழியர்கள் லஞ்சம் பெறும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 10 சக்கர லாரியா, 12 சக்கர லாரியா என விசாரித்து அதற்குத் தகுந்தாற்போல் லஞ்சம் பெறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.