ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 புதிய பால் பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, உப்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை சேர்த்து உருவாக்கப்பட்ட ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகிய புதிய பொருட்களை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
அதே போல் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள www.tnpowerfinance.com என்ற புதிய வலைதளத்தையும், “TNPFCL” என்ற புதிய செல்போன் செயலியையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அந்நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரிடம் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை மின் துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.