தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனும் காவல் துறை நண்பர்கள் அமைப்புக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அமைப்பு எப்போது? எந்த நோக்கத்தில் தொடங்கப்பட்டது என்பதைப் பார்க்கலாம்...
சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் தொடர்பு எனச் சர்ச்சை எழுந்துள்ளது.
சர்ச்சையில் சிக்கியுள்ள இந்த பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை உருவாக்கியதே, தற்போது சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் பிரதீப் பிலிப் தான். 1993ஆம் ஆண்டில் பிரதீப் பிலிப் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது இந்த அமைப்பை உருவாக்கினார். மக்களுக்கும் காவல் துறையினருக்கும் நல்லுறவைப் பேணுவதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு பகுதியிலும் சமூக விழாக்கள் சுமூகமாக நடக்க இந்த அமைப்பு காவல் துறைக்கு உதவியாக இருந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல் துறையில் தங்களுக்கு இருக்கும் தொடர்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட போதே இதைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்தார்.
நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஐ.பி.எஸ் அதிகாரி பிரதீப் பிலிப்புக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. மத்திய அரசின் ஸ்காட்ச் விருதும் கூடக் கிடைத்தது. நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீசைச் சிலர் தவறாகப் பயன்படுத்தியதால், இப்போது தடை செய்யப்படும் அளவிற்குச் சென்றுள்ளது.