சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாகத் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேர் ஆஜராகி 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திங்களன்றும் வாக்குமூலம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து சிபிசிஐடி பிரிவினர் விசாரித்து வரும் நிலையில், ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், முத்துராஜ் ஆகிய 5 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை ஜூன் 19ஆம் தேதி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றதைக் கண்ணால் பார்த்த சாட்சிகளான பென்னிக்சின் நண்பர்கள் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் சாட்சியம் அளித்தனர்.
ரவிச்சந்திரன், ரவிசங்கர், மணிமாறன், சங்கரலிங்கம், ராஜாராமன் ஆகிய 5 பேரும் ஒவ்வொருவராக ஆஜராகித் தங்களுக்குத் தெரிந்த விவரங்களையும், கண்ணால் கண்ட காட்சிகளையும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேர விசாரணைக்குப் பின் மீண்டும் திங்களன்று வந்து விவரங்களைத் தெரிவிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது