திருச்செந்தூரை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் (வயது 32)இவர், கேரள மாநிலம் குருவாயூரில் ஹோட்டல் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குறித்த வீடியோ பதிவு ஒன்றை மணிகண்டன் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்தும் அவதூறு வீடியோ வெளியிட்டதாகவும் மணிகண்டன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, குருவாயூரில் இருந்த மணிகண்டனை திருந்செந்தூர் போலீஸார் ஜூன் 7 - ந் தேதி கைது செய்துள்ளனர். வாரண்ட் இல்லாமல் குருவாயூர் போலீஸின் உதவியையும் நாடாமல் மணிகண்டனை திருச்செந்தூர் போலீஸார் கைது செய்ததாக சொல்லப்படுகிறது.
மணிகண்டனிடத்திலுருந்து பணம், ஏ.டி.எம் கார்டு அனைத்தையும் பறித்து கொண்ட போலீஸ் அவரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்துள்ளது. போலீஸ் நிலையத்தில் மணிகண்டனின் தந்தையும் சகோதாரரும் இருந்துள்ளனர். ஆனால், அவர்களிடத்தில் மணிகண்டனை போலீஸார் பேச விடவில்லை. போலீஸார் தாக்கியதில் மணிகண்டனின் வலது கை முறிந்து போயுள்ளது. கட்டுபோடப்பட்டு பேராவூரணி சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார். தற்போது, சாத்தான்குளம் சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மணிகண்டனும் போலீஸார் தன்னை தாக்கியது குறித்து நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட சிறைகளில் போலீஸால் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதி ஒருவர் தூத்துக்குடி மாவட்ட சிறைகளில் ஆய்வு நடத்தி வருகிறார். சிறைகளில் நீதிபதி ஆய்வு செய்வதையடுத்து, பேராவூரணி சிறையில் கையில் கட்டுப்போட்ட நிலையில் இருந்த மணிகண்டன் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனாலேயே மணிகண்டன் போலீஸால் டார்ச்சர் செய்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.
போலீஸ் தாக்கியது குறித்து மணிகண்டன் கூறியிருப்பதாவது, '' ஜூன் 8- ந் தேதி என்னை திருச்செந்துர் டி.எஸ்.பி யிடத்தில் அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தின் மேல் மாடியில் வைத்து போலீஸார் காலையிலிருந்து மதியம் 3 மணி வரை அடித்தனர். இரண்டு லத்திகள் உடைந்து போயின. பின்னர், பிளாஸ்டிக் பைப்பை வைத்தும் அடித்தனர். இதில், எனது வலது கை உடைந்து போனது. வலியால் நான் துடித்தேன். பிறகு, என் இடது கையில் விலங்கு மாட்டி அருகிலிருந்த ஜன்னலில் பூட்டி வைத்து இரும்பு தடியால் அடித்தனர். மருத்துவரிடத்திலோ அல்லது நீதிபதியிடத்திலோ அடித்தது குறித்து எதுவும் சொல்லக் கூடாது என்று போலீஸார் என்னை பயமுறுத்தினர். திருச்செந்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராமன் என்னை மாஜிஸ்திரேட்டு சரணவணனிடத்தில் (சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் , பென்னிக்ஸ் ஆஜர் செய்யப்பட்ட அதே மாஜிஸ்திரேட்டு)ஆஜர் படுத்தினார் போலீஸார் மிரட்டியதால் நீதிபதியிடத்தில் கீழே விழுந்து கை முறிந்து விட்டதாக பொய் சொன்னேன். பின்னர், என்னை பேராவூரணி சிறையில் அடைத்தனர். போலீஸாருக்கு பயந்து நான் ஜாமீன் கூட கேட்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் கூறுகையில்,'' மணிகண்டனுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும். இப்போதுதான் நான் எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ளேன். வழக்கு குறித்து ஆராய வேண்டும் ''என்று தெரிவித்துள்ளார்.