தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்திற்கான ரேசன் பொருட்களை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விலையில்லாமல் ரேசன் பொருட்களை வழங்கி வருகிறது.
ஜூலை மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் அதாவது, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ கூடுதல் அரிசியுடன் நியாய விலைக்கடைகளில் விலையின்றி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்புடன் பொருட்களை வழங்குவதற்காக வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.
பொதுமக்கள் முகக் கசவம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.