முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களுக்கு ஜூலை 10-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சென்னை, மதுரை மற்றும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மேற்கண்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டது.
ரேஷன் கடை ஊழியர்கள் நிவாரண உதவி தொகை வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களை ஜூலை 10-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.