சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் ரேவதியிடமும், பிரெண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் சிபிசிஐடி டிஐஜி சங்கர் பேட்டி அளித்தார்.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 5 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவலர் முத்துராஜைத் தேடி வருவதாகவும், அவரை 2 நாட்களில் கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். வழக்குத் தொடர்பாகச் சில கண்காணிப்புக் கேமரா காட்சிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தலைமைக் காவலர் ரேவதியிடமும், பிரெண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.