சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் விவகாரத்தில், தானாக முன்வந்து விசாரணை நடத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தடயங்களை சேகரிப்பதற்கு வசதியாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று காலை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி அமர்வில், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சிபிசிஐடி காவல் துறையினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தங்களது விசாரணையை முடித்து விட்டதாகவும், தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
எனவே வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டினை நீக்கி கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
அதை ஏற்ற நீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பவும் உத்தரவிட்டனர்.