சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 3 பேரும், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை, வரும் 16ஆம் தேதி வரை சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவர்கள் மூவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 13 மணி நேர விசாரணைக்குப் பின் 3 பேரும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தில், நீதிபதி ஹேமா முன்னிலையில் ஸ்ரீதர் உள்ளிட்ட மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 16 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவலர் முத்துராஜ் தலைமறைவாக உள்ளதால் அவரை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் சென்று சிபிசிஐடி போலீசார் தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை. முத்துராஜின் இருப்பிடத்தை அறிய அவரது உறவினரை விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை நேரடி சாட்சியாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் யாரும் அப்ரூவராக மாறவில்லை, யாரையும் அப்ரூவராக மாற்றும் எண்ணம் இல்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்தார். வழக்கு நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடைபெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என கூறினார்.