கூட்டுச் சதி செய்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் அடித்து கொலை செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடி தலைமைறைவாகியுள்ள காவலர் முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரண வழக்கை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி முரளிதரன், விருதுநகர் சிபிசிஐடி டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படைகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் நேற்று காலை சாத்தான் குளம் வந்து விசாரணையை தொடங்கினர்.
சிபிசிஐடியின் ஒரு குழு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். மற்றொரு குழு சம்பவம் நடைபெற்ற ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடை தொடங்கி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது வரையிலான சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
3வது குழு சம்பவம் நடைபெற்ற இடங்களில் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதை சிபிசிஐடி போலீசார் உறுதி செய்தனர். பிரேதப்பரிசோதனை அறிக்கையின் மூலம் ஜெயராஜ் பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் அழைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனை ஏற்று எஸ்ஐ ரகு கணேஷ் தூத்துக்குடி சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் விசாரணைக்கு வந்தார். அவரிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்.
சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக மாற்றினர். மேலும் கூட்டுச் சதி, தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் முதல் ஆளாக எஸ்ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட எஸ்ஐ ரகு கணேஷை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் சிறையில் அடைப்பதற்கு உடல் தகுதியுடன் இருப்பதாக சான்றிதழ் பெறப்பட்டு தூத்துக்குடி நீதிபதி ஹேமா முன்னிலையில் ரகு கணேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன் பிறகு எஸ்ஐ ரகு கணேஷை, பேரூரணியில் உள்ள தூத்துக்குடி கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு எஸ்ஐயான பாலகிருஷ்ணனையும் கைது செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறினர். ஆனால் அவரை எங்கு எப்போது கைது செய்தனர் என்கிற தகவல் வெளியாகவில்லை. இதே நேரத்தில் சிபிசிஐடியின் ஒரு தனிப்படை விசாரணைக்கு வராமல் வீட்டில் இருந்த தலைமைக் காவலர் முருகனை அங்கு நேரில் சென்று கைது செய்தனர்.
தலைமறைவான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலர் முத்துராஜை சிபிசிஐடி தனிப்படை தேடி வந்தது. இந்த நிலையில் ஆய்வாளர் ஸ்ரீதர் நெல்லையில் இருந்து தேனிக்கு செல்வதாக தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து கங்கைகொண்டானில் வைத்து ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் அதிகாலை நான்கே முக்கால் மணிக்கு கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோரிடம் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேசமயம், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார். அவரை விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் சென்று போலீசார் தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை. இன்றைக்குள் அவரையும் கைது செய்துவிடுவோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்று சாத்தான்குளத்தில் வியாபாரிகள் பட்டாசு வெடித்தனர்.
சாத்தான்குளம் தந்தை - மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை ஒட்டி அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
பிற்பகலில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரையும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.