தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதோடு தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்கி வருகிறது. ஏற்கனவே 5 முறை முதலமைச்சரை இந்தக் குழு சந்தித்து அப்போதைய நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது.
இந்நிலையில், மருத்துவ வல்லுநர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. மருத்துவ நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த சிலருடன் காணொலி வழியாக எடப்பாடி பழனிசாமி கருத்துகளைக் கேட்டறிகிறார்.
கொரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள சென்னை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
தமிழகத்தில் கட்டுப்பாட்டை நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.