கொரோனாவில் இருந்து குணமடைந்து செல்பவர்கள் பிளாஸ்மா கொடுக்க முன்வரவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் கொரோனா வார்டுகளை ஆய்வு செய்த அவர், பின்னர் கொரோனா சிகிச்சை பெறுபவர்களை வீடியோ காலில் அழைத்து, வழங்கப்படும் சிகிச்சை மற்றும் உணவு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தன்னம்பிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குணமாகி செல்பவர்கள் பிளாஸ்மா கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை என்ற அவர் அதனை ஏற்கனவே மத்திய அரசும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.