கடந்த 1971- ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரில் , வங்கதேசம் என்ற புதிய நாட்டை 13 நாள்களில் உருவாக்கிய பீல்டு மார்ஷல் ஜெனரல் சாம் மானக்ஷாவின் 12-வது நினைவு தினத்தை முன்னிட்டு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும் Defence Services Staff College அதிகாரிகள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்திய ராணுவத்தில் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்றவர்கள் இரண்டே பேர் மட்டுமே. ஒருவர் ஜெனரல் கரியப்பா , மற்றோருவர் ஜெனரல் சாம் மானக்ஷா. 1969 - ம் ஆண்டு இந்திய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற சாம் மானக்ஷாவின் தலைமையில்தான் 1971 - ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டது. முடிவில், வங்கதேசம் என்ற ஒரு புதிய நாடு உருவானது. 1972- ம் ஆண்டு இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது. நாட்டுக்கும் ராணுவத்துக்கும் சாம்மானக்ஷா ஆற்றிய சேவையை பாராட்டி 1973-ம் ஆண்டு ஜனவரி 15- ந் தேதி அவருக்கு பீல்டு மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஓய்வுக்கு பிறகு குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் சாம் மானக்ஷா வசித்தார். மெட்ராஜ் ரெஜிமென்டை மிகவும் நேசித்த காரணத்தினால், தன் கடைசி காலத்தை இங்கேயே அவர் கழித்தார். கடந்த 2008- ம் ஆண்டு ஜூன் 27- ந் தேதி சாம் மானக்ஷா இறந்தார். இன்று அவரின் 12-வது நினைவு தினம் ஆகும்.
பஞ்சாப்பில் உள்ள அம்ரிஸ்தரில் 1914-ம் ஆண்டு ஏப்ரல் 3- ந் தேதி பிறந்த சாம் மானக்ஷா, பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்ற முதல் ராணுவத் தளபதி ஆவார். 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய சாம் மானக்ஷா, இரண்டாவது உலகப் போர், 1947 -இந்தியா -பாகிஸ்தான் போர், 1965 -இந்தியா- சீனா , 1965 -இந்தியா- பாகிஸ்தான் 1971- இந்தியா- பாகிஸ்தான் போர் ஆகிய ஐந்து பெரும் போர்களில் பங்கேற்றவர். 1942-ம் ஆண்டு பர்மாவில் ஜப்பானிய படைகளுடன் போரிட்ட போது, அவரின் உடலில் 9 குண்டுகள் பாய்ந்து அதிசயமாய் உயிர் பிழைத்தவர் சாம் மானக்ஷா.
சாம்மானக்ஷாவின் நிகைவு தினத்தை முன்னிட்யட Defence Services Staff College கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.வி.கே மோகன், உதகமண்டலத்தில் உள்ள பார்சி ஜோராஸ்ட்ரியன் அமைந்துள்ள சாம் மானக்ஷாவின் கல்லறையில் மரியாதை செலுத்தினார்.