பாரத்நெட் திட்டத்திற்கு விரைவில் மறு டெண்டர் கோரப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, பொதுமக்களுக்கு கபசுர கசாய பொடியினை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ஆரம்ப நிலையிலேயே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, பாரத்நெட் திட்டத்திற்கு செயற்கையாக தடை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்றதாக அவர் குற்றம்சாட்டினார்.
தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஏற்ப நிபந்தனைகள் இடம்பெறும் வகையில், பாரத்நெட் திட்டத்திற்கு மறு டெண்டர் கோருவதற்கு மத்திய அரசு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் மறு டெண்டர், இ- டெண்டர் முறையில் வெளிப்படைத் தன்மையோடு கோரப்படும் என்றும் உதயகுமார் தெரிவித்தார். எந்தவித குளறுபடியும் இல்லாமல் மக்களிடையே பாரத்நெட் திட்டம் கொண்டு சேர்க்கப்படும் என அமைச்சர் கூறினார்.