சாத்தான்குளம் சம்பவத்துக்கு காரணமாக இரண்டு எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழகம் முழுவதும் வியாபாரிகளான தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த இருவரையும் சாத்தான்குளம் எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. ஜூன் 22- ந் தேதி பென்னிக்ஸ் இறந்தார். அடுத்த நாள் அதிகாலையில் ஜெயராஜூம் இறந்து போனார். இது தொடர்பாக , ஜெயராஜின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குப்பதிவு செய்தார். மதுரை நீதிமன்றமும் இந்த வழக்கை தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
மதுரை உயர்நீதிமன்ற பதிவாளர் இந்த வழக்கை தொடர்ந்தார் . வழக்கை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்கோபால் இமெயில் மூலம் நீதிபதிகளுக்கு சில விளக்கமளித்துள்ளார். அதில்,'' ஜூன் 19- ந் தேதி போலீஸார் அறிவுரையை மீறி இருவரும் செல்போன் கடையை திறந்து வைத்துள்ளனர். போலீஸார் கடமையை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அன்றைய தினம் இரவு 11.30 மணியளவில் ஜெயராஜ், பென்னிக்ஸை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி சிறையில் 20- ந் தேதி மதியம் அடைக்கப்பட்டனர்.
பென்னிக்சுக்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர் 22- ந் தேதி இரவு 9 மணியளவில் இறந்து போனார் . அடுத்த நாள் ஜெயராஜூம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து போனார்'' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், '' தந்தை மகன் விவகாரத்தில் போலீஸாரின் நடவடிக்கை கொரோனா போன்ற ஒரு நோயாகும். போலீஸாருகு மனவளக் கலை பயிற்சி அளிக்க வேண்டும் '' என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடத்தில் அறிவுறுத்தினர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது, '' கோவில்பட்டி நீதிமன்ற 1- வது நீதிபதி சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடத்தில் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கும் சென்று வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து இடங்களுக்கும் கோவில்பட்டி நீதிபதி சென்று விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியிடத்திலிருந்து எங்களுக்கு வந்த தகவலின்படி, கோவில்பட்டி கிளை சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜாசிங் என்பவர் படுகாயங்களுடன் அடைக்கப்பட்டு, தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்தும் கோவில்பட்டி நீதிபதி விசாரித்து எங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இறந்து போனவர்களில் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தை யாரும் குறைத்து மதிப்பீட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே , சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்துக்கு காரணமான எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ப்பட்ட இருவரும் ஒரே காரில் ஏறி தப்பி விட்டதாகவும் தகவல் உள்ளது இதுவரை, எஸ்.ஐ- க்கள்இருவரும் எங்கேயிருக்கின்றனர் என்கிற தகவலைபோலீஸ் துறையும் சொல்லவில்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இருவரும் கைதும் செய்யப்படவில்லை. எஸ்.ஐ.க்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிய வேண்டுமென்று ஜெயராஜின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.