கோவில்பட்டி சிறையில் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பான பதிவேடுகள், மருத்துவப் பதிவேடுகளைப் புகைப்படம் எடுத்து வைக்கவும், அங்கிருக்கும் சிசிடிவி பதிவுகளைச் சேகரித்துப் பாதுகாப்பாக வைக்கவும் நீதித்துறை நடுவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்று மற்றொரு தொற்றுநோய் போல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்த நிலை அறிக்கையை மின்னஞ்சல் வழியாகத் தாக்கல் செய்த தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் காணொலியில் விளக்கம் அளித்தார்.
உடற்கூறு ஆய்வு முடிந்து அறிக்கை தயாராக உள்ள நிலையில் ஊரடங்கால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கோவில்பட்டி நீதித்துறை நடுவர், கிளைச் சிறைக்குச் சென்று அங்கிருக்கும் நிர்வாகப் பதிவேடுகள், மருத்துவப் பதிவேடுகளைப் புகைப்படம் எடுக்கவும், வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சேகரித்துப் பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டனர்.
இதேபோல ராஜா சிங் என்கிற கைதியும் தாக்கப்பட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக விசாரித்துத் தனியே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யத் தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்று மற்றொரு தொற்றுநோய் போல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
காவல்துறையினருக்குத் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகளையும், வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகள் பரப்புவதையும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.