மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது? கடுமையாக்குவது குறித்து ஆட்சியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகப் பாதிப்புள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், மதுரை மாநகராட்சியிலும் வரும் முப்பதாம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், பரவலைத் தடுக்கவும், நோயைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகியவை குறித்துச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கொரோனா சோதனையை அதிகப்படுத்தவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
சென்னையில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருவோரைக் கட்டாயம் 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா? அதிகரிப்பதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மண்டலத்துக்குள்ளே பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை மாற்றி, அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.