தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, தடுப்புப் பணிகளின் நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே மார்ச் 25 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பாதிப்பு மிகவும் அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், மதுரை மாநகராட்சியிலும் வரும் முப்பதாம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், பரவலைத் தடுக்கவும், நோயைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகியவை குறித்துச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஊரடங்கு தொடங்கியபின் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவது இது ஏழாவது முறையாகும். ஐந்தாம் கட்ட ஊரடங்கு வரும் 30ஆம் தேதி முடியவுள்ள நிலையில், அதை மேலும் நீட்டிப்பதா? தளர்த்துவதா? கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? தளர்த்துவதா? என்பதை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் கேட்டறிந்து வருகிறார். இதன் அடிப்படையில் கொரோனா தடுப்புப் பணிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.