சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ள உயர்நீதிமன்றக் கிளை, இன்று விசாரணை நடத்துகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ்,அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பென்னிக்ஸ் மாரடைப்பாலும், ஜெயராஜ் காய்ச்சலால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரால் தாக்கப்பட்டு இருவரும் உயிரிழந்ததாக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இருவரது உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை ஏடிஜிபி-க்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.சிசிடிவி பதிவு உள்ளிட்ட ஆதாரங்களுடன் 8 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.