விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவராக இருந்த கருணா, 2004- ம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றார். பின்னர், இலங்கை அதிபராக இருந்த கோத்தப்பய ராஜபக்சேவின் இலங்கை மக்கள் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். 2009 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டனர். இலங்கை படையினரின் வெற்றிக்கு பின்னணியில் கருணா இருந்ததாக சொல்லப்பட்டது. கடந்த 2010- ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட கருணா ராஜபக்சே அரசில் துணை அமைச்சராகவும் இருந்தார். விடுதலைப்புலிகளை போரில் தோற்கடிக்க உதவியற்காக ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி அளித்ததாக கருதப்பட்டது.
தற்போது . கருணா தமிழக விடுதலை ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சி ராஜபக்சேவின் இலங்கை மக்கள் சுதந்திர கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கை அதிபராக கோத்தப்பயவும் அவரின் சகோதரர் மகிந்திர ராஜபக்சே பிரதமராகவும் பதவியேற்றனர். இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்துக்கான பதவி காலம் முடிய ஆறு மாதம் இருக்கும் அதிபர் கோத்தப்பய நாடாளுமன்றத்தை கலைத்தார். வரும் ஆகஸ்ட் 5- ந் தேதி இலங்கை நாடாளுமன்றதுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள திகமாதுல்லா தொகுதியில் போட்டியிடும் கருணா தன் தேர்தல் பிரசாரத்தின் போது சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ளார். பிரசாரத்தின் போது, ''விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது, ஒரே இரவில் ஆணையிறவில் தான் மட்டுமே 2,000 முதல் 3, 000 அரசுப் படையினரை சுட்டுக் கொன்றேன். கிளிநொச்சியில் இன்னும் அதிகமானோரை சுட்டுக் கொன்றேன். சொல்லப் போனால் இலங்கையில் கொரோனாவை விட அதிக உயிர்களை எடுத்தவன் நான்'' என்று பேசினார்.
காரத்தீவு பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், 'கொரோனாவை விட கருணா கொடியவர்' என்று கருணாவை விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும்விதத்தில், கருணா இவ்வாறு பேசியதாக சொல்லப்படுகிறது.
சர்ச்சைக்குரிய பேச்சையடுத்து , இலங்கை போலீஸ் தலைவர் சந்தனா விக்ரமசிங்கே , கருணா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கருணாவின் பேச்சால் தெற்கு இலங்கையில் மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால், தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள கருணா, '' போர் என்று வரும் போது உயிரிழப்புகளும் ஏற்படத்தான் செய்யும். பாதுகாப்புப் படையினரும் இறந்தனர். விடுதலைப்புலிகளும் பலியாகினர். என்னை ஹீரோவாக காட்டிக் கொள்ள அதை நான் சொல்லவில்லை. நான் யார் என்பது நாட்டை ஆளும் ராஜபக்சே குடும்பத்துக்கு தெரியும். நான் ஜனநாயக பாதைக்கு திரும்பி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. சிங்கள மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் சிலர் என் பேச்சை திரித்து வெளியிடுகின்றனர் '' என்று கூறியுள்ளார்.