கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவை எந்த பரிசோதனையின் அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
66 இயற்கை மருத்துவ பொருட்களை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மருத்துவ பொடி ஒன்றை தயார் செய்துள்ளதாக, சித்த மருத்துவர் சுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதனை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்க ஆயுஷ் அமைச்சக செயலருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரம்பரிய முறையில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை பரிசோதிக்க ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆங்கில மருத்துவ லாபி இயற்கை மருத்துவத்தை அழித்துவிடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனாவுக்கு கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.