செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கொக்கில மேடு கடலோரத்தில் கரையொதுங்கிய போதைப் பொருளின் சந்தை மதிப்பு 250 முதல் 300 கோடி ரூபாய் என்றும், சந்தை மதிப்பு நாட்டுக்கு நாடு மாறுபடும் என்பதால் ஆயிரம் கோடி ரூபாய் வரை விலைபோகக் கூடியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் சீலிடப்பட்ட தகர டிரம் உருளை மிதந்து வந்து கரை ஒதுங்கியுள்ளது. அதில் ஆயில் அல்லது டீசல் இருக்கக் கூடும் என மீனவர்கள் அதனை உடைத்துப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதில் “ரீபைன்ட் சைனீஸ் டீ” என சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட தலா 1 கிலோ எடையுள்ள 78 பொட்டலங்கள் இருந்துள்ளன.
இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு சென்று அதனை சோதனையிட்ட மாமல்லபுரம் போலீசார் போதைப் பொருளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைத்தனர்.
சோதனையில் அது ஹெராயின் வகையைச் சேர்ந்த மெதாம்பெட்டமைன் என்ற, மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் சக்திவாய்ந்த போதைப் பொருள் என தெரிய வந்துள்ளது.
இந்த போதைப் பொருள் மியான்மர் நாட்டிலிருந்து வந்திருக்கக்கூடும் என போதை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சர்வ தேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் எப்படி கடலில் மிதந்து வந்தது என போதை தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் யாராவது படலில் வந்து போதைப் பொருள் டிரம்மை கடலில் வீசிவிட்டுச் சென்றனரா? சந்தேக நபர்கள் யாராவது நடமாடுகிறர்களா? அல்லது மர்ம படகில் கடலில் உலாவுகின்றனரா? என ஆய்வு செய்தனர்.
படகு மூலம் கடத்தப்படும்போது தவறி விழுந்ததா? படகு உடைந்து அதிலிருந்து வெளியேறியதா? கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் இருந்தபோது அவர்களிடம் சிக்காமல் இருக்க கடலில் வீசப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.