கிரகணத்தின்போது சூரியனை வெறுங்கண்களாலும், தொலைநோக்கி, பைனாக்குலர் கொண்டும் பார்க்கக் கூடாது எனத் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
அமாவாசை நாளில் சூரியனுக்கும் புவிக்கும் நடுவே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. நிலவு புவியை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. இதனால் புவிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு மூன்றரை லட்சம் கிலோமீட்டர் முதல் 4 லட்சம் கிலோமீட்டர் வரை மாறுபடுகிறது.
அதிகத் தொலைவில் நிலவு இருக்கும்போது அதன் தோற்றம் சூரியனின் தோற்றத்தைவிடச் சற்றுச் சிறியதாக இருக்கும். அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க இயலாது.
ஒரு வளையம் போலச் சூரியனின் வெளி விளிம்பு அதிகப்பட்சக் கிரகணத்தின்போது வெளித் தெரியும். இதைக் கங்கண சூரிய கிரகணம் என்கிறோம். இந்தக் கங்கண சூரிய கிரகணம் தான் இன்று ஏற்பட்டுள்ளது.
இந்தக் கிரகணத்தை இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரக்கண்ட் ஆகிய மாநிலங்களில் காணலாம். இதேபோல் மத்திய ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா, வட இந்தியா, தெற்குச் சீனா ஆகிய பகுதிகளிலும் தெரியும்.
தமிழகத்தில் பத்தேகால் மணிக்குக் கிரகணம் தொடங்கி ஒன்றே முக்கால் மணி வரை நீடிக்கிறது. அதிகப்பட்சக் கிரகணம் 12 மணி வாக்கில் ஏற்படுகிறது. சென்னையில் 34 விழுக்காடு வரை சூரியனை நிலவு மறைத்துச் செல்லும்.
சென்னையில் சூரிய கிரகணம் 10.22 மணிக்குத் தொடங்கி 1.41 மணிக்கு முடிவடைகிறது. கங்கணக் கிரகணத்தின்போது சூரியனை வெறுங்கண்களால் பார்க்கக் கூடாது. தொலைநோக்கி, பைனாக்குலர், உருப்பெருக்கி ஆகியவற்றைக் கொண்டும் சூரியனைப் பார்க்கக் கூடாது. அப்படிச் செய்தால் கண்பார்வையை இழக்க நேரிடும் எனத் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் எச்சரித்துள்ளது.