பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதியளிக்கப்பட்டது. இதற்காக, விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் (தமிழ்நாடு திருத்தம்) தனிச்சசட்டம், 2017- ம் ஆண்டு இயற்றப்பட்டது . இந்த சட்டம்தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பு 2020- ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் காளைகளுக்கு பல்வேறு கொடுமைகள் நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் 103 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் பீட்டா அமைப்பு இணைத்துள்ளது.
பீட்டாவின் அறிக்கையில், '' தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 7 பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் காளைகளும் மனிதர்களும் தொடர்ந்து பலியாகியுள்ளனர் ஜல்லிக்கட்டின் போது, காளைகள் துன்புறுத்தப்பட்டன. கூர்மையாக்கப்பட்ட மரக் குச்சிகள், உலோகக் கம்பிகளால் துன்புறுத்தப்பட்டன. காளைகளின் வால்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கடிக்கப்பட்டதோடு, முறுக்கியும் இழுக்கப்பட்டன.
மூக்கு கயிறுகளை பிடித்து இழுத்ததால், காளைகளின் நாசியிலிருந்து இரத்தம் வெளியேறியது. இதனால், பீதியடைந்த காளைகள் கிராம வீதிகளில் தப்பி ஓடியதோடு. பார்வையாளர்களைக் காயப்படுத்தின, சிலரைக் கொன்றன. காளைகளும் இறந்தன. கால்நடை மருத்துவர்களால் காளைகள் போதுமானளவு மருத்துவ சோதனைக்குள்ளாக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு தொடர அனுமதிக்கப்பட்டால் காளைகள், மனிதர்கள் இறப்பு அதிகமாகிக் கொண்டேதான் போகும் கடந்த 2017- ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுவில் பங்கேற்ற 22 காளைகள் இறந்துள்ளன. மனிதர்கள் 57 பேர் உயிரிழந்துள்ளனர். 3,632 பேர் காயமடைந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.