கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்காக பயன்படுத்த, சிறப்பு மருந்து அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் (remdesivir) உள்ளிட்டவை வழங்கும் சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. கொரோனாவால் தீவிர பாதிப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக, Tocilizumab என்ற மருந்தும் வெளிநாடுகளில் பரிந்துரைக்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், உயிரிழப்புகளை தடுப்பதில் இந்த மருந்து பலனளித்துள்ளது என்ற அடிப்படையிலும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக்குழு பரிந்துரையின் அடிப்படையிலும் Tocilizumab மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த, முதல் கட்டமாக 100 மருந்து பாட்டில்கள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. ஐ.வி. மூலம் செலுத்தப்படும் இந்த மருந்தின் விலை 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் உள்ளது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில், சோதனை முறையில் பயன்படுத்த Tocilizumab மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.