தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடு கிடு வென உயர்வதால், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 38 பேர், உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,974 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 33 பேரும் அடங்குவர். இதன் மூலம் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 19 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதேநேரம் கொரோனாவின் பிடியில் இருந்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 38 பேரை கொரோனாவுக்கு இரை ஆகி விட்டனர். இவர்களில், 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் மரணம் அடைந்தனர்.
30 வயது இளம் பெண் ஒருவர் , சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையிலும், 38 வயது பெண், ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் இறந்தனர். இதேபோல, விருதுநகரை சேர்ந்த 34 வயது இளைஞர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், விழுப்புரத்தைச் சேர்ந்த 38 வயது ஆண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை 2 ஆயிரத்திற்கு மேற்பட் டோரும், 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 37 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், சுமார் 2 ஆயிரம் மூதாட்டிகள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.