தமிழகத்தில் அதிக பட்சமாக கொரோனா பிடியில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 372 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 700-ஐ தாண்டி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
எகிறும் கொரோனாவால் புதிய உச்சம் தொட்ட தமிழகத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக ஆயிரத்து 875 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் வெளி நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 38 பேரும் அடங்குவர். இதன் மூலம் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 700 - ஐ தாண்டி விட்டது.
ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் நடத்தப்பட்ட வைரஸ் தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
கொரோனாவின் பிடியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 372 பேர் குணம் அடைந்ததால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 700ஐ தாண்டி விட்டது.
அதிகபட்சமாக ஒரே நாளில் 23 பேர் கொரோனாவுக்கு இரை ஆனார்கள். இவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். எனவே,தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி 349 ஆக உயர்ந்துள்ளது.
12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை, 977 சிறுமிகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் சுமார் 32 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆயிரத்து 622 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.