தமிழகத்தில், ஒரே நாளில் ஆயிரத்து 562 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 562 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதில், கத்தார் மற்றும் குவைத்தில் இருந்து தாயகம் திரும்பிய 12 பேரும், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் வந்து சேர்ந்த 30 பேரும் அடங்குவர்.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஒரே நாளில் ஆயிரத்து 500 பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி ஆகி இருப்பது, இது, 2 - வது நாளாகும்.
தமிழகத்தில், சுமார் 15 ஆயிரத்து 413 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், கொரோனா வின் பிடியில் இருந்து இதுவரை சுமார் 17 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
ஒரே நாளில் சுமார் 15 ஆயிரம் மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம் மொத்தம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்தை எட்டி உள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் உள்பட ஒரே நாளில் 17 பேர் வைரஸ் தொற்றுக்கு இரை ஆனதால் கொரோனா உயிர்ப்பலி, 286 ஆக உயர்ந்துள்ளது.
12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை, 858 சிறுமிகள் உள்பட ஆயிரத்து 765 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் சுமார் 28 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆயிரத்து 331 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 558 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.