கொரோனா வைரஸ் காரணமாக , தெலங்கானா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 3496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 123 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், இந்த மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களும் செவிலியர்களும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஹைதரபாத்தில் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள நிசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகதாரத்துறை ஊழியர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் விதமாக அந்த மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்றார். மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை, அவர்களின் பணியை வெகுவாக பாராட்டினார்.
தகுந்த பாதுகாப்பு உடையுடன்தான் கொரோனா பாதிக்கப்பட்ட இடத்துக்கு தமிழிசை சென்றிருந்தார். 'ஆளுநராக இருந்தாலும் ஒரு டாக்டருக்குரிய கடமையை அவர் இன்னும் மறக்கவில்லை' என்று தெலங்கானா மக்கள் பேசிக் கொள்கின்றனர்.