கொரோனாவுக்கு எதிரான போரில், நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேவை இல்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர், மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டு மே கொரோனாவை ஒழிக்க முடியும் என கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது, கொரோனா வைரஸ், நம் இயல்பு வாழ்க்கையை பாதித்ததுடன் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால், இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தனி மனித உறுதியும் ஒழுக்கமுமே கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர், விதிகளை மதிக்காமல் அனைவரும் இருந்திருந்தால், நாம்இதைவிட மோசமான விளைவுகளை சந்தித்து இருப்போம் என்றார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, என்னென்ன உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன ? என்ற விவரங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் 47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதி அளித்தார். தேவை இல்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்ட முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி, முழு ஒத்துழைப்பு கொடுத்தால், கொரோனாவை நிச்சயம் ஒழிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவீதம் அதிகம் என்றும், உயிரிழப்புகளின் விகிதமும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவு என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கொரோனாவுக்கு எதிரான போரில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும், சுகாதாரப்பணியாளர்கள் என முன்களப்பணியில் ஈடுபட்டு.அளப்பரிய சேவை ஆற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.