கிர்கிஸ்தானில் தவித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 800 மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் தங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிர்கிஸ்தானில் பிஸ்ஹெக் நகரில் உள்ள ஓ.எஸ்.ஹெச் , ஐ.எஸ்.எம். - ஐ.யு.கே. , கே.ஜி.எம்.ஏ, ஜலடாபாட் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவ- மாணவிகள் மருத்துவம் படித்து வருகின்றனர். கொரோனா காரணமாக கிர்கிஸ்தானிலும் லாக்டௌன் அமலில் உள்ளது.
வந்தேபாரத்தில் திட்டத்தின் கீழ், கிர்கிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு மூன்று விமானங்கள் இயக்கப்பட்டன. கொச்சி, புதுடெல்லி, ஹைதரபாத் நகரங்களுக்கு அந்த விமானங்கள் இயக்கப்பட்டன. சென்னைக்கு இயக்கப்படவில்லை. இதனால், கிர்கிஸ்தானில் இருந்து தமிழ்நாடு திரும்ப முடியாத நிலையில் இந்த மாணவ- மாணவிகள் இருக்கின்றனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
இந்த நிலையில், தங்களை கிர்கிஸ்தானில் இருந்து மீட்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வீடி யா வெளியிட்டுள்ளனர். அதில், '' இங்கு நாங்கள் 800 பேர் தவிக்கிறோம். இந்திய தூதரகத்தை அணுகினால், தமிழக அரசிடத்தில் பேச சொல்கின்றனர். அதனால் , தமிழக முதல்வர் கிர்கிஸ்தானிலிருந்து நேரடியாக சென்னை அல்லது கோவை திருச்சிக்கு நாங்கள் வர ஏற்பாடு செய்து தர வேண்டும். எங்களது ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான் ''என்று பரிதாபமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிர்கிஸ்தானில் தவிக்கும் வித்யா நந்தினி என்ற மாணவி கூறுகையில், '' இங்கு லாக்டௌன் அறிவிக்கப்பட்டதிலிருந்தே நாங்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். எங்களுக்கு உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் கூட இல்லை. நான் உள்பட இங்கு தவிக்கும் ஒவ்வொருவரும் அரசிடத்தில் உதவி கேட்டு வருகிறோம். நாங்கள் படிக்கும் பல்கலைக்கழகங்கள் கிர்கிஸ்தான் அரசும் கூட எங்களை நம்பி பலனில்லை .எங்கள் கையில் எதுவும் இல்லையென்று கை விரித்து விட்டன'' என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.