வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை வந்தால் தான் அதன் அருமை புரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 4 வழிச்சாலை வந்த பிறகும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளதாக தெரிவித்தார்.
6 வழிச்சாலை, விரைவுச் சாலை என வடமாநிலங்கள் சிறப்பான சாலை வசதிகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, வளர்ச்சி பாதையில் செல்லும் தமிழகத்தில் எட்டு வழிச்சாலை வந்தால் தான் போக்குவரத்து நேரம் குறைந்து வணிகம் உள்ளிட்டவை மேம்படும் என்று முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இதை கருத்தில் கொண்டு தான் உச்சநீதிமன்றத்தில் 8 வழிச்சாலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.