சென்னையில் ஜூலை மாத இறுதிக்குள் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் 1,600 பேர் பலியாவார்கள் எனவும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு கூறியுள்ளது.
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் பிரிவு துறை தலைவர் ஜி. சீனிவாஸ் கூறுகையில், '' சென்னையில் கொரோனா பரவல் ஜூலை இரண்டாவது வாரத்தில் உச்சத்தில் இருக்கும். ஜூலை 15 - ம் தேதிக்குள் சென்னையில் கொரோனா தொற்றால் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கவே செய்யும் .
நோய் தொடர்ந்து பரவி வருவதால் போதுமான அளவு படுக்கைகள், தனிமைப்படுத்தும் வசதி, ஐ.சி.யு போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்''என்கிறார்.
ஜூன் 30- ந் தேதிக்குள் சென்னையில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று;k கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னையில் 18,693 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் , '' சென்னையில் 9,034 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். சென்னையிலுள்ள 1, 000 கன்சைன்மென்ட் பகுதிகளில் கடந்த 14 நாள்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. சென்னையில் அதிகளவில் கொரோனா பாதிப்பு இருப்பதால் ஒட்டு மொத்த நகரமுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டாம். குடிசைப் பகுதிகளிலும் தேனாம்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர் ,கோடம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களிலும்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.