ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழி லாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவின் சங்லி மாவட்டம் குப்வாட் என்ற கிராமத்தில் தவிக்கும் தமிழர்கள் 400 பேரை மீட்கக்கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தொடர்ந்த ஆட் கொணர்வு மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்திய - மாநில அரசுகள் அவகாசம் கேட்டதால், விசாரணையை வருகிற 8 - ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
அதேநேரம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.