சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக ஆயிரம் மருத்துவர்களை பணியில் அமர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.
இதனால், மருத்துவ பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்த ஆயிரம் மருத்துவர்களை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், உதவி பேராசிரியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.