ஊரகத் தொழில் மேம்பாட்டிற்காக 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் புதிதாகத் தொழில்களைத் தொடங்கவும் 300 கோடி ரூபாய் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு நிதியுதவி வழங்கினார்.
கிராமப்புற தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் மற்றும் பிற பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்த இளைஞர்கள் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கனவே தொழில் செய்துகொண்டிருப்பின் அதனை மேம்படுத்திடவும், 1,39,574 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசம் தயாரித்தல், கிருமி நாசினிகள் மற்றும் கைகழுவும் திரவ சோப்பு தயாரித்தல், ஆடைகள் தயாரிப்பு, பால்வள மேம்பாடு, ஆடு, மாடு, கோழி, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, சிறு உணவகங்களை நடத்துதல், வேளாண் பொருட்கள் விற்பனை, சிறு மளிகைக் கடைகள் வைத்தல், அரவை மாவுத் தொழில், பல்வேறு உலோகப் பொருட்களை தயாரித்தல், செயற்கை ஆபரணத் தொழில், அழகுக்கலை, மரச்சிற்பங்கள் / மரவேலைகள், மின் பழுது நீக்கம், குழாய் பழுது நீக்கம், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுநீக்கம், கணினி சார்ந்த தொழில்கள், கைபேசி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் மேம்பாட்டிற்காக இச்சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். இதன்மூலம் ஊரக பொருளாதார வளர்ச்சியும், ஊரக தொழில்களில் எழுச்சியும், மக்கள் வருமானத்தில் முன்னேற்றமும் ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.