காவிரி ஆற்றில் கழிவு நீர் கலந்துவிடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் முன் வரவேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் முடங்கிய நிலையில், தூய்மையாக இருந்த காவிரி ஆற்றில், மீண்டும் கழிவு நீர் கலக்க தொடங்கிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளனவா என மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ள அன்புமணி ராமதாஸ் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.