ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை எளிமையான முறையில் தனிநபர் இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது.
ரமலான் நோன்பு நிறைவடைந்த பிறகு, பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நிலையில், இன்று மசூதிகள், பள்ளிவாசல்கள் திறக்கப்படாததால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் புத்தாடை உடுத்தி தனிநபர் இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.
நாகை மாவட்டம், புகழ்பெற்ற நாகூர் தர்கா ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது. மசூதி பூட்டப்பட்டிருந்த போதும், வெளியே நின்றவாறே தனி நபர் இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திச் சென்றனர். தூத்துக்குடி,சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வீடுகளிலேயே தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பரஸ்பர அன்பை வெளிப்படுத்தினர்.