கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடுசெய்யும் வகையில், அனைத்து அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா வைரஸ் தடுப்பு, மற்றும் நிவாரண பணிகளால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களால், 2020-21 ஆம் நிதி ஆண்டு செலவின மதிப்பீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடுசெய்யும் வகையில் நடப்பு நிதியாண்டின் மொத்த செலவினத்தில் 20 சதவீத செலவுகளை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அனைத்து அரசுத் துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பதவி உயர்வு, பணியிட மாறுதலால் ஏற்படும் காலி பணியிடம் மற்றும் கருணை அடிப்படையிலான தொடக்க நிலை பணியிடத்தை நிரப்ப தடையில்லை.
அரசு விழாக்களில் வழங்கப்படும் சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசுகளை தவிர்க்க வேண்டும், அதிகாரிகள் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் விமானத்தில் உயர்வகுப்பில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும்,
மாநிலத்துக்கு வெளியே பிற மாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணிக்கும் போது ரயில் கட்டணத்துக்கு இணையான கட்டணத்துக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் தினப்படி 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான பணி மாற்றத்துக்கு மட்டுமே அனுமதி அளித்தும், பொதுவான பணி மாற்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அலுவல் ரீதியான மதிய விருந்து, இரவு விருந்துகளை மறு உத்தரவு வரும் வரை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய துறைகளான சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மற்றும் அரசு உதவி அளிக்கும் திட்டங்களுக்கு மட்டும்
உபகரணங்கள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற துறைகள் உபரகணங்கள் கொள்முதல் செய்வதை ஓராண்டுக்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை, தீயணைப்பு, காவல்துறை, மிக மிக முக்கிய நபர்களுக்கான வாகனங்கள் மட்டும் வாங்கவும், பழைய கணிணிகளை மட்டும் மாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போல பல்வேறு செலவினங்களில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.