சென்னையில் ஒரே நாளில் 552 பேருக்கும், செங்கல்பட்டில் 22 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 552 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் உயிரிழந்த 84 பேரில் சென்னையில் மட்டும் 58 பேரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரில் 8 பேர், காஞ்சிபுரத்தில் 5 பேர், தஞ்சாவூரில் 3 பேர் ராமநாதபுரம், கன்னியாகுமரியில் தலா 2 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.
திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை தேனி, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மேலும் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து கடலூர் வந்த ஒருவருக்கும், மகாராஷ்டிராவின், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து வந்த 49 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாலத்தீவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பிய பயணிகளில் இதுவரை 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.