தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்க கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பேரிடர் நிதியாக மாநில அரசுகள் தேவையான அளவு கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த கையோடு, அந்த கடனை பெறுவதற்கு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுக்கு சிறிதளவும் பொருத்தமானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மாநில கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய சூழலை மத்திய அரசே உருவாக்குகிறது எனக் கூறியுள்ள ஸ்டாலின், ஊரடங்கு காலத்திலும் மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். ஆகையால், இலவச மின்சார திட்டத்தை பாதுகாத்திட மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.