உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு, ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அரசு வழங்கிய தளர்வுகள் அமலானதை அடுத்து கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டன. அதற்கெதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடைகளை மூட உத்தரவிட்டதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஒரு வாரத்திற்கு பின்னர் தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் இன்று மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் முறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. அதிகாலை முதலே காத்திருந்து டோக்கன் வாங்கி சென்ற குடிமகன்கள், நீண்ட வரிசையில் தனிநபர் இடைவெளியுடன் காத்திருந்து மது வாங்கி செல்கின்றனர்.