தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொலியில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16ஆம் தேதி புயலாகவும் உருமாறும் என வானிலை மைய இயக்குநர் கூறியுள்ளார்.
இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் 14ஆம் தேதி மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், எனவே 14ஆம் தேதி முதல் மத்திய மற்றும் தெற்கு வங்ககடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.