தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தான் தளர்த்த முடியும், முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை என மருத்துவ நிபுணர் குழுவினர் முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளனர்..
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையை மேம்படுத்த, சிகிச்சைக்கான நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னையில் உள்ள சில மருத்துவர்கள் நேரில் வந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், நான்காம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் கவுர், தமிழ்நாட்டில், தொடர்ச்சியாக பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும், ஊரடங்கை படிப்படியாக தான் தளர்த்த முடியும், முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை என்றும் முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ததாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தொற்று நோய் நிபுணர் குகானந்தம், அதிக பாதிப்பு எண்ணிக்கை வரும்போது விரைவாக கொரோனா வில் இருந்து மீண்டு வர முடியும் என்றார். கொரோனா குறித்து பொதுமக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.