மத்திய வங்க கடல் பகுதியில் வருகிற 16-ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 15-ம் தேதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், இது மேலும் வலுப்பெற்று, வருகிற 16-ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக மையம் கொள்ள வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், அவ்வப்போது மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், 15,16, 17, ஆகிய தேதிகளில் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.