வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரானில் உள்ள குமரி மாவட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிற மாநிலங்களில் தங்கியுள்ள மீனவர்களைத் தமிழகத்துக்கு உடனடியாக அழைத்துவர இயலாத நிலையில், அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே உணவு, உடை, தங்குமிடம் ஆகிய வசதிகளைச் செய்துகொடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 684 மீனவர்கள் மங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்துவரப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட பின் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தமானில் உள்ள தமிழக மீனவர்கள் 190 பேரைத் தமிழகத்துக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.