கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது, பொருளாதாரத்தை ஊக்குவிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியா முழுவதும் 3ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. முதலிரண்டு கட்டங்களில் இல்லாத அளவுக்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள இந்த 3ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, 5ஆவது முறையாக காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனையில், அனைத்து முதலமைச்சர்களும் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த முறை, நேரப் பற்றாக்குறை காரணமாக கோரிக்கைகளையும் கருத்துகளையும் முதலமைச்சர்கள் எழுத்து வடிவில் சமர்ப்பித்தார்கள். இந்த முறை அனைவரும் நேரடியாக பேச அனுமதிக்கப்படுவதால் ஆலோசனைக் கூட்டம் அதிக நேரம் நடைபெற உள்ளது.
பிரதமருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர்கள், மாநில தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவது அதேசமயம் பொருளாதாரச் செயல்பாடுகளை அதிகரிப்பது இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் தனது தொடக்க உரையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை பற்றிக் குறிப்பிட்டார். அவரவர் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு வலியுறுத்தினாலும், சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவது மனித இயல்பு என மோடி கூறினார்.
அதற்கேற்ப முடிவு மாற்றியமைக்கப்பட்டு, புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். அதேசமயம், கிராமங்களுக்கும் தொற்று பரவி விடாமல் தடுப்பது மிகப்பெரிய சவால் என மோடி குறிப்பிட்டார்.
அமித்ஷா பேசும்போது, ஆரோக்கிய சேது செயலியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார். இந்த செயலியை பரவலாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் முதலமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.
பிரதமர்-முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து 4ஆவது கட்ட ஊரடங்கு இருக்குமா, புதிதாக எத்தகைய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கும்.